ஐயப்பனுக்கு மாலை போட போறீங்களா? அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...!

ஐயப்பனுக்கு மாலை போட போறீங்களா? அப்ப கட்டாயம் இத ஃபாலோ பண்ணுங்க...!

கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்பனை தரிசனம் செய்ய மாலை அணிந்து ஐயப்பனுக்கு விரதமிருக்க தொடங்கியிருப்பார்கள். இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் இருந்தாலும், தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கடவுள் தான் ஐயப்பன்.

கேரளாவில் உள்ள சபரிமலையில் இருக்கும் ஐயப்பனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கார்த்திகை மாதத்தில் விரதமிருந்து செல்வார்கள். சாஸ்தா, தர்மசாஸ்தா, ஹரிஹரன், மணிகண்டன் போன்ற பல பெயர்களால் ஐயப்பன் அழைக்கப்படுகிறார்.

தனித்துவமான தோற்றத்தைக் கொண்ட ஐயப்பன் சிவன் மற்றும் விஷ்ணுவால் பிறந்ததாக கூறப்படுகிறது. இவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறார். ஐயப்பனின் ஆசி இருந்தால், சனி பகவானின் மோசமான விளைவுகளையும் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ஐயப்பனுக்கு மாலை போடுவதாக இருந்தால், அதுக்குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு போட வேண்டும். ஐயப்பனுக்கு மாலை போடும் போது செய்யும் தவறுகள் ஐயப்பனின் கோபத்திற்கு ஆளாக்குவதோடு, வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இப்போது ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள் குறித்து காண்போம்.

 * கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருக்க நினைக்கும் பல ஆண்கள் தற்போது அதை முறையாக பின்பற்றுவதில்லை. பலர் ஒரு வாரம், 3 நாட்கள் விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்கிறார்கள். ஆனால் அப்படி செல்லக்கூடாது. ஐயப்பனின் பரிபூர்ண அருளைப் பெற வேண்டுமானால், கன்னி சாமியாக இருந்தாலும், குரு சாமியாக இருந்தாலும் ஒரு மண்டலத்திற்கு விரதமிருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க வேண்டும்.


சுவாமி ஐயப்பனுக்கு விரதமிருப்பதாக இருந்தால், தாய், தந்தை மற்றும் குருவிடம் தகவலை தெரிவித்து அனுமதி பெற்ற பின்னரே மாலை அணிய வேண்டும். அப்படி மாலை அணியும் போது, அதை கோவிலிலோ, தாயார் முன்னிலையிலோ அணிவதே நல்லது. 

* ஐயப்பனுக்கு மாலை அணிய நினைப்போர் துளசி மாலையை அணிவது நல்லது. அதுவும் அவரவர் வசதிக்கேற்ப வெள்ளி அல்லது செம்பு கம்பியால் கட்டிய துளசி மாலைகளை அணிந்தால், அதை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 * முக்கியமாக ஒவ்வொரு முறை புதிய மாலையை வாங்கி அணிவதை விட, ஒரே மாலையை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொண்டால், அந்த மாலை ஒரு தெய்வீக சக்தியைப் பெறுமாம்.

ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு, ஐயப்பன் கோவிலுக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வதோடு, 108 முறை ஐயப்பனின் சரண கோஷத்தை சொல்லி பூஜிக்க வேண்டும். 

* ஐயப்பனுக்கு விரதமிருக்கும் போது சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் அளவுக்கு அதிகமாக சாப்பிடாமல், அளவாக உட்கொள்ள வேண்டும். அதற்காக சாப்பிடாமல் இருக்கக்கூடாது. எதுவும் அளவாக இருக்க வேண்டும்.

 * தற்போதைய காலகட்டத்தில் வேலை செய்வோர் மாலை வேளையில் வீட்டிற்கு வர முடிவதில்லை. பலர் வீட்டிற்கு வர இரவு ஆகிவிடுகிறது. எனவே மாலையில் பூஜிக்க முடியாதவர்கள், வேலை முடிந்து வீட்டிற்கு எப்போது வருகிறோமோ, அப்போது குளித்துவிட்டு பூஜை செய்தால் போதும். 

* முதல்முறையாக ஐயப்பனுக்கு மாலை அணிபவர்களை கன்னி சாமி என்று அழைப்பர். இவர்கள் கட்டாயம் கருப்பு நிற ஆடைகளையே அணிய வேண்டும். மேலும் காலில் காலணிகள் எதுவும் அணியக்கூடாது. எப்போதும் மனதில் ஐயப்பனை நினைத்தவாறு இருக்க வேண்டும். அனைவரிடமும் பணிவாக கனவாக நடந்து கொள்ள வேண்டும். கோபம் கொள்வதையோ, கெட்ட வார்த்தைகளை பேசுவதையோ தவிர்க்க வேண்டும்.

* சக ஐயப்ப பக்தர்கள் நடத்தும் பூஜைகள், பஜனைகளில் அவசியம் கலந்து கொள்வதோடு, தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். 

ஐயப்பனுக்கு மாலை அணிந்து அவரை ஒரு மண்டலம் மனதில் நினைத்து, சுத்தமாக இருந்து ஐயப்பனை மனமுருகி வேண்டினால், நம் ஆசைகள் அனைத்தும் ஐயப்பனின் அருளால் நிறைவேறும். எனவே மாலை போடுபவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளதை மனதில் கொண்டு அவற்றை தவறாமல் பின்பற்றி ஐயப்பனுக்கு விரதமிருந்து சபரிமலையில் தரிசனம் செய்யுங்கள்.


Post a Comment

0 Comments