திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றம்.. விண்ணை எட்டிய அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கம்..!
திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்ட போது கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக திகழ்வது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். மலையே சிவமாக திகழ்வதால் இங்கு பக்தர்கள் கிரிவலம் வந்து வணங்குகின்றனர். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் வந்து பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா எல்லை தேவதைகளுக்கு பூஜையுடன் செவ்வாய்கிழமை இரவு தொடங்கியது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான விநாயகர், முருகன், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கோவில் கொடிமரம் முன்பு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியவுடன் அண்ணாமலையார் சந்நதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க துலா லக்னத்தில் காலை 05:30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
0 Comments
Post a Comment