வைகாசி விசாக திருவிழா: வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம்..!

வைகாசி விசாக திருவிழா: வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம்..!



வைகாசி விசாக திருவிழாவையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.


சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு வைபங்கள் நடைபெற்று வருகின்றன.


விழாவில் தினமும் மங்களகிரி விமானத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா, சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு, ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர் வீதி உலா, நாக வாகனத்தில் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.





இந்த நிலையில் வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். குடும்பம் குடும்பமாக வந்த பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். இரவு ஒய்யாவி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.


இன்று 21-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆண்டவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சண்முகர் வீதி உலாவும், காலை 10 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. அதைதொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், மயில்வாகன புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. வருகிற 23-ந்தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது.


அதன் பின்னர், 24-ந்தேதி முதல் ஜூன் 2-ந்தேதி வரை வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் தினந்தோறும் மாலையில் பரத நாட்டியம், இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



Post a Comment

0 Comments