மிக்ஜாம் புயல் பாதிப்பால் இழந்த சான்றிதழை பெற வேண்டுமா?: சிறப்பு முகாம்கள் விபரம் இதோ!

மிக்ஜாம் புயல் பாதிப்பால் இழந்த சான்றிதழை பெற வேண்டுமா?:  சிறப்பு முகாம்கள் விபரம் இதோ!



மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு மற்றும் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களை கட்டணமில்லாமல் பெற  சிறப்பு முகாம்கள் இன்று முதல் செயல்படும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், மழை வெள்ளப் பாதிப்பினால்,  குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி, பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  


அதன் அடிப்படையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில்  இன்று முதல் அடுத்த மாதம் 10 ஆம் தேதிவரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குன்றத்தூர், மாங்காடு, கொளப்பாக்கம், செரப்பணஞ்சேரி பகுதிகளில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும், படப்பையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

Post a Comment

0 Comments