ஒத்தி வைக்கப்படும் பணி நிரவல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி..!

 ஒத்தி வைக்கப்படும் பணி நிரவல்: அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி..!


அரசு பள்ளிகளில் பணி நிரவல் கவுன்சிலிங், இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் தடுமாறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆண்டு தோறும் ஆக., 1ல், அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்எண்ணிக்கை அடிப்படையில், உபரி மற்றும் பற்றாக்குறை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன. 

இவற்றை முறையாக ஆண்டு தோறும் நடத்த வேண்டும் என, நீதிமன்றம் மற்றும் மத்திய அரசும் வலியுறுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களில், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான பணி நிரவல் கவுன்சிலிங் நவ., 20ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் நவ., 27ல் நடைபெறும் என கூறி, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் வழங்கிய, பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்டவற்றை நிறைவேற்றாமல், ஆசிரியர்களுக்கு பாதகமாகவே செயல்பட்டு வருவதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், பணி நிரவல் கவுன்சிலிங் மூலம் கட்டாய மாறுதல் வழங்கப்பட்டால், மேலும் அதிருப்தி அதிகரிக்கும். இதனால், இரண்டு முறை தேதி அறிவிக்கப்பட்டும் நடத்தப்படவில்லை. கட்டாயமாக செய்யாமல், பெயரளவில் நடத்தி முடிக்க, அரசு தரப்பிலிருந்து அழுத்தம் தரப்படுவதாகவும், அதிகாரிகள் தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது.இவ்வாறு கூறினர்.

- தினமலர் செய்தி


Post a Comment

0 Comments