மாநில கலைத்திருவிழாவில் பங்கேற்க 436 மாணவர்கள் தேர்வு..!!
திருச்சி, செங்கல்பட்டு, வேலுார் மாவட்டங்களில் நடக்கும் மாநில கலைத்திருவிழாவுக்கு, திருப்பூரில் இருந்து, மாணவ, மாணவியர் புறப்பட்டு சென்றனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில கலைத்திருவிழா நேற்று (21ம் தேதி) துவங்கி வரும், 24ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வேலுாரிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு செங்கல்பட்டிலும், மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு திருச்சியிலும் நடக்கிறது.கடந்த அக்., மாதம், திருப்பூரில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று, முதலிடம் பெற்று, மாணவ, மாணவியர், 436 பேர், மாநில போட்டியில் பங்கேற்க சென்றனர். திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, 15 அரசு பஸ்கள் மூலம் மாணவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக, மாணவர்களிடம் பேசிய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, நம் மாவட்டத்துக்கு வெற்றியை தேடித்தர, உங்களது திறமையை காட்ட உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. மாநில போட்டிகளில் கவனமுடன் பங்கேற்று, வெற்றி பெற்று திரும்பி வாருங்கள், என பேசினார்.
0 Comments
Post a Comment