நீட் தேர்வில் கருணை மதிப்பெண்: தேசிய தேர்வு முகமையின் விளக்கத்தை ஏற்க மறுப்பு..!



நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக கூறும் தேசிய தேர்வுகள் முகமையின் விளக்கத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.


இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு அத்தேர்வு நடைபெற்றது. ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விகள் வினாத் தாளில் இடம்பெற்றிருந்தன. நீட்தேர்வைப் பொருத்தவரை ஒருகேள்விக்கு சரியாக விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறாக விடையளித்தால் நெகடிவ் மார்க் முறையில் 1 மதிப்பெண் கழிக்கப்படும். அவ்வாறு கணக்கிடும்போது அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர் சரியாகவிடையளிக்கும்போது 720 மதிப்பெண்கள் கிடைக்கும். ஒரே ஒருகேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அதற்கான நான்கு மதிப்பெண்கள் மற்றும் நெகடிவ் மார்க்காக 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.


அந்த வகையில் முழு மதிப்பெண்ணுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளவர்கள் 715 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நடப்பாண்டில் சில மாணவர்கள் 719 மற்றும் 718 மதிப்பெண்களை பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை(என்டிஏ) அளித்துள்ள விளக்கத்தில், “தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் எதிர்பாராமல் விரயமானால் அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


அதன் அடிப்படையில் சிலமாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்தமாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், எப்போது, யாரெல்லாம் விண்ணப்பித்தனர் என்ற விவரங்கள் எதுவும் இல்லை. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.