தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளை தொடங்க கோரிக்கை

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல்) உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு 2024-25-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த கடந்த 23-ம் தேதி தொடங்கியது. வரும் ஜூன் 21-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர் மாணவ, மாணவியர் விண்ணப்பித்து வருகின்றனர்.


பி.பார்ம் படிக்க 2 அரசு மருத்துவ கல்லூரிகள், பிஎஸ்சி நர்சிங் படிக்க 6 அரசுக் கல்லூரிகள் உட்பட துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 14 அரசுக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆனால், 350-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள் இருக்கின்றன.


இதுதொடர்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடம் கேட்ட போது, “தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளை படிக்க லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அரசு கல்லூரிகளில் 2,200-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 15 ஆயிரம் இடங்களும் உள்ளன.


மொத்தமுள்ள இடங்களில் 85 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. எனவே, துணை மருத்துவப் படிப்புகளை அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள்” என்றனர்.

Post a Comment

0 Comments