கடலில் மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்ட அரிதான இந்திய ரூபாய் நோட்டுகள் ஏலம்..!

கடலில் மூழ்கிய கப்பலில் கண்டெடுக்கப்பட்ட அரிதான இந்திய ரூபாய் நோட்டுகள் ஏலம்..!



1918ம் ஆண்டு மும்பையில் இருந்து லண்டன் சென்று கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட அரிதான இரண்டு 10 ரூபாய் நோட்டு லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது. இந்த நோட்டுகள் 2000 முதல் 2600 பிரிட்டன் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


லண்டனில்


கடந்த 1918 ம் ஆண்டு மும்பையில் இருந்து லண்டனுக்கு எஸ்எஸ் ஷிர்லா என்ற கப்பல் சென்றது. வழியில் ஜூலை 2ம் தேதி ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் இந்த கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்து இந்த இரண்டு 10 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த நோட்டுகள் நூனன்ஸ் மேபேர் ஏல மையத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இந்த நோட்டுகள் இங்கிலாந்து வங்கியால் அச்சிடப்பட்டன. அந்த கப்பலில் 5 ஆயிரம் டன் சரக்குகள் ஏற்றப்பட்டன. அதில், இந்திய நாணயத்தின் அசல் காகிதங்களும் இருந்தன.


வங்கி தகவல் மூலம்


இது தொடர்பாக ஏல மையத்தின் அதிகாரி கூறுகையில், கப்பல் மூழ்கிய பகுதியில் இருந்து கையெழுத்திடாத 5 மற்றும் 10 ரூபாய் உள்ளிட்ட நோட்டுகள் கரைக்கு வந்தன. அதில் கையெழுத்திட்ட 1 ரூபாய் நோட்டும் அடக்கம். அது ஏலத்தில் விடப்பட உள்ளது. அங்கு பெரும்பாலான நோட்டகள் கைப்பற்றப்பட்டு கிழித்து எறியப்பட்டன. அதற்கு மாற்றாக புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இருப்பினும் பழைய நோட்டுகள் சில தனியார் வசம் உள்ளது. இது போன்ற நோட்டுகளை இதுவரை பார்த்தது கிடையாது. கப்பல் மூழ்கியது தொடர்பாக இங்கிலாந்து வங்கி செய்தி வெளியிட்ட பிறகே எங்களின் கவனத்திற்கு வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


கோல்கட்டா முத்திரை


இது தவிர ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்த ரூ.100 இந்திய ரூபாய் நோட்டும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நோட்டு 5 ஆயிரம் பவுண்ட் வரை விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நோட்டுகளில் கோல்கட்டாவில் கையெழுத்திட்டு முத்திரையிடப்பட்டது. இந்த முத்திரை 1917 -1930 இடையில் பயன்படுத்தப்பட்டது. ஹிந்தி மற்றும் வங்க மொழியில் எழுதப்பட்டு உள்ளது.


அசோக சின்னம்


அடுத்த வாரம் 5 ரூபாய் நோட்டு ஒன்று ஏலத்திற்கு வருகிறது. இது 2,200 - 2,800 பவுண்டுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நோட்டானது 1957 -62 ல் அச்சடிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி , பெர்சியன் கல்ப் வெளியீடு என பொறிக்கப்பட்டு உள்ளதுடன் அசோக சின்னமும் அதில் உள்ளது.

Post a Comment

0 Comments