உச்சம் தொட்ட காற்று மாசு : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!!

 உச்சம் தொட்ட காற்று மாசு : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!!

டெல்லியில் காற்றின் தரம் கடுமையான அளவைத் தொட்டதை அடுத்து, தலைநகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளையும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடுமாறு முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். அவை பள்ளிகள் விடுமுறை முதல் கட்டிடப் பணிகளுக்கான தடை வரை நீள்கின்றன.

டெல்லி - என்சிஆரில் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் நகருக்குள் டீசல் டிரக்குகள் நுழைவதும் தடைசெய்யப்படுகிறது. ’கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான்’ - ஜிஆர்ஏபி நிலை 3 என்பவதாக குறியிடப்பட்டதை முன்னிட்டு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

அதிகரித்து வரும் காற்று மாசு அளவுகள் மற்றும் ஜிஆர்ஏபி நிலை 3 என்பதை செயல்படுத்துவது குறித்து, அனைத்து துறைகளின் கூட்டம் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. மிகவும் சாதகமற்ற வானிலை மற்றும் தட்பவெப்ப நிலைகள் காரணமாக, காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்று தர மேலாண்மை ஆணையம் கணித்துள்ளது.

தொடக்கப் பள்ளிகளுக்கான 2 நாள் விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதர வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, உடற்பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு உச்சம் தொட்டதை அடுத்து சுவாசப் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். குழந்தைகள் நலன் நாடும் வகையில், டெல்லி அரசு தற்போது அறிவித்துள்ள தொடக்கப் பள்ளிகளுக்கான விடுமுறை, தேவையைப் பொறுத்து நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.Post a Comment

0 Comments