ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 சம்பளத்திற்கு ஆசிரியர் போட்டித் தேர்வு பயிற்சி அளிக்க பயிற்றுனர்கள் தேவை..!!
கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்க, அனுபவம் மிக்க பயிற்றுனர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் 2024 ஜன., 7ம் தேதி நடத்தப்படுகிறது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இலவச பயிற்சி வகுப்பு, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், கடந்த 17ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.
போட்டித் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடத்த அனுபவமிக்க பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்றுனர்களுக்கு மதிப்பூதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 வீதம் வழங்கப்படும். பயிற்சி வகுப்புகள் கம்ப்யூட்டர் விளக்க காட்சி மூலம் நடத்த வேண்டும், மாதிரி வினாத்தாள் தயார் செய்து தர வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டும். பயிற்றுனர்கள் நேர்காணலுக்கு வரும்போது தாங்கள் தயார் செய்த பாடக்குறிப்புகள், மாதிரி வினா போன்றவைகளை எடுத்து வர வேண்டும்.
விருப்பம் உள்ள பயிற்றுனர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிபர குறிப்பு மற்றும் கல்விசான்று நகல்களுடன் இன்று (22ம் தேதி) நாளை 23ம் தேதி, கடலுார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment