விநாயகர் சதுர்த்தி 2024 எப்போது ? தேதி, நேரம், சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள்..!
விநாயகர் என்றாலே தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவர் என்று பொருள். அனைவருக்கும் முதலான தெய்வம் என்பதாலேயே இவரை முழு முதற் கடவுள் என போற்றுகின்றோம். அனைத்து கணங்களும் விநாயகப் பெருமானுக்குள் அடக்கம் என்பதாலும், அவரது இடுப்பில் சர்ப்பங்களை கயிறாக கட்டி இருப்பதாலும் விநாயகரை வழிபடுவதால் நவகிரகங்கள், நாகங்களால் ஏற்படும் எந்த தோஷமும் நம்மை நெருங்காது
விநாயகர் முதலும் முடிவும் இல்லாத கடவுள் என்றாலும், அவர் ஞானத்தின் வடிவமாக யானை முகத்துடன் தோன்றிய தினத்தையே அவரது அவதார தினமாக கொண்டாடுகிறோம். பலரது இஷ்ட தெய்வமாக இருக்கக் கூடிய விநாயகப் பெருமானின் அவதார தினத்தை விநாயகர் சதுர்த்தியாக நாம் கொண்டாடுகிறோம். இந்த நாளில் பலரும் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவார்கள்.
விநாயகர் சதுர்த்தி :
முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளையே ஆண்டுதோறும் நாம் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடி வருகிறோம். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியிலேயே விநாயகப் பெருமான் அவதாரம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் என்றாலே அது விநாயகர் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, கணேச சதுர்த்தி என பல பெயர்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு:
விநாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீடுகளிலும், பொது இடத்திலும் வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான கொலுக்கட்டை, மோதகம், சுண்டல், அப்பம், அவல், பொரி, பழங்கள் உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவது உண்டு. பிறகு 3வது அல்லது 5வது நாளில் வீடுகளிலும், பொது இடத்திலும் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கும் வைபவம் நடைபெறும். இப்படி கரைப்பதால் அந்த சிலையை போலவே நம்முடைய வினைகளும் கரைந்து விடும் என்பது நம்பிக்கை. வட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி 2024 தேதி :
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 07ம் தேதி, ஆவணி 22ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. செப்டம்பர் 06ம் தேதி பகல் 01.48 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 07ம் தேதி பகல் 03.38 வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. செப்டம்பர் 06ம் தேதியே சதுர்த்தி திதி துவங்கினாலும், செப்டம்பர் 07ம் தேதி தான் சூரிய உதய காலத்தின் போது சதுர்த்தி திதி உள்ளது. அதனால் அந்த நாளையே விநாயகர் சதுர்த்தி நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அன்று சனிக்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமும், பகல் 01.30 முதல் 3 மணி வரை எமகண்ட நேரமும் உள்ளது. இதனால் இந்த நேரங்களை தவிர்த்து பகல் 1 மணிக்கு முன்பாக விநாயகர் வழிபாட்டினை செய்வது சிறப்பானதாகும்
0 Comments
Post a Comment